×

உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் செப்.12 முதல் விசாரணை: விரிவான விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு

புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு வரும் 12ம் தேதி முதல் விசாரிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான விரிவான விபரங்களை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கு (பொதுப்பிரிவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டது. முதன்முறையாக உயர்சாதி வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரில் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளோர், 5 ஏக்கர் நிலம் வரை வைத்திருப்போர் மேற்கண்ட இட ஒதுக்கீட்டின் மூலம் பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்கண்ட இடஒதுக்கீடு முறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இவ்வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்திர பட், எம்.திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஆலோசனை நடத்தியது. அப்போது தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கு தொடர்பாக எந்த மாநிலங்கள் வேண்டுமானாலும் தங்களது வாதங்களை முன்வைக்கலாம். ஆனால் வாதங்களை முன் வைப்பதற்கான கால அளவை தெரிவிக்க வேண்டும். மனுதாரர்கள் தங்களது தரப்பு விரிவான விபரங்களை சமர்பிக்க வேண்டும். செப். 12ம் தேதி முதல் 16ம் தேதி வரையுள்ள முதல் வாரத்தில் மூன்று வேலை நாட்களும், செப். 19 முதல் 23ம் தேதி வரை உள்ள இரண்டாவது வாரத்தில் இரண்டு வேலை நாட்களும் இவ்வழக்கு விசாரிக்கப்படும். வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை குறித்து இறுதி நிலைப்பாடு எடுக்கப்படும். தொடர்ந்து அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் வழக்கு விசாரணை நடைபெறும்’ என்றார். …

The post உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் செப்.12 முதல் விசாரணை: விரிவான விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Suprem ,New Delhi ,Supreme court ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...